95 சதவீத பணிகள் நிறைவு: திறப்பு விழாவுக்கு தயாராகும் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வருமா?


திறப்பு விழாவுக்கு தயாராகும் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வருமா? என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம் மாநகரின் இதய பகுதியாக சேலம் பழைய பஸ் நிலையம் திகழ்கிறது. கடந்த 1990-ம் ஆண்டுக்கு முன்பு வரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.

வாகன நெரிசல்

சேலம் நகரம் காலப்போக்கில் அசுர வளர்ச்சி பெற்றது. இதனால் நகரின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, பழைய பஸ் நிலையத்தில் அதிக வாகனங்கள் நிறுத்த முடியாதவாறு வாகன நெரிசல் அதிகரித்தது. பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது.

இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, சேலம் பள்ளப்பட்டி பகுதியில் புதிய பஸ் நிலையம் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் சுமார் 63 ஆண்டுகள் பழமையான பழைய பஸ் நிலையத்தின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் சேதம் அடைந்து காணப்பட்டன.

ரூ.93 கோடியில்...

இதனால் பழைய பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.92 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இதற்கான பணியை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பழைய பஸ்நிலையம் பகுதி முழுவதும் இடிக்கப்பட்டு ஈரடுக்கு பஸ் நிலையம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கு தரை மற்றும் முதல் தளத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர கடைகள், அரசு அலுவலகங்களும், மொட்டை மாடியில் ஓட்டல் வசதியும் அமைக்கப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கடும் நெரிசல்

ஈரடுக்கு பஸ்நிலையம் கட்டும் பணியால் போஸ் மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து மாநகர பகுதிக்குள்ளும், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ராசிபுரம், மல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் 197 அரசு பஸ்களும், 84 தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

ஒரு திட்டப்பணி நடைபெறும் போது, தற்காலிக பஸ் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்படுவது இயல்பு தான். அந்த வகையில், காலை, மாலை நேரங்களில் வெளியூர்களில் இருந்து பஸ்கள் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள், ெதாழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்கள் தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதற்குள் போதும், போதும் என்று ஆகிவிடுகிறது. இதுதவிர ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் அங்கும், இங்குமாக நெருக்கமாக நிற்பதால் பயணிகள் எங்கே புகுந்து எப்படி செல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

விரைவில் முடிக்க வேண்டும்

இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்றால் அது ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணியை விரைவில் முடித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தான். தற்போது 95 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், இடநெருக்கடியில் தவிக்கும் மக்களின் இன்னல் தீர்க்க இந்த பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு ெகாண்டு வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

===

சேலம் ஈரடுக்கு பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகள் எப்போது நிறைவு பெறும் என்பது குறித்து அதிகாரிகள் கூறும்போது, 'ஈரடுக்கு பஸ் நிலைய பணிகள் 95 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டது. வெளிப்புற பகுதிகளில் மட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை உயர் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து விரைவில் முடிக்க அறிவுறுத்தி வருகின்றனர். எனவே விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றனர்.

தற்காலிக பஸ்நிலையத்தில் நெருக்கடியால் பொதுமக்கள், வியாபாரிகள் பரிதவிப்பு

சேலத்தை சேர்ந்த பழ வியாபாரி கோவிந்தராஜ் கூறியதாவது:-

காலத்திற்கு ஏற்ப பழைய பஸ் நிலையத்தை ஈரடுக்கு பஸ் நிலையமாக விரிவுப்படுத்துவது வரவேற்கக்கூடியது தான். தொடக்கத்தில் முழுவீச்சில் நடைபெற்ற இந்த பணிகள் தற்போது மெதுவாக நடைபெறுகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு அதிகாரிகளும் ஆய்வு செய்த பின்னர் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் எப்போது முடியும் என்று தெரியவில்லை. மேலும் இந்த பணிகளால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது'

தனியார் பஸ் டிரைவர் விஜய் கூறியதாவது:-

சேலத்தில் ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கி சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் முடிவடையாமல் உள்ளது. தற்போது உள்ள பஸ் நிலையத்தில் கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சிறிது நேரம் மட்டுமே நின்று ஆட்களை ஏற்ற முடிகிறது. இதனால் பஸ்களில் குறைந்த அளவில் பயணிகள் ஏறிய உடனே காலி இருக்கைகளுடன் பஸ்களை இயக்கும் நிலை உள்ளது. இதன்மூலம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த யசோதா கூறியதாவது:-

இடநெருக்கடி காரணமாக பஸ்கள் அடுத்தடுத்து நிற்பதால் நாம் செல்லும் பஸ்களை தேடி பிடித்து ஏறுவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இடநெருக்கடியால் தற்காலிக பஸ் நிலையத்துக்குள் வரும் பஸ்கள் பயணிகளை இடிப்பது போல் வந்து செல்வதால் ஒருவித அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story