பொள்ளாச்சி மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்
ஓணம் பண்டிகை காரணமாக கேரள வியாபாரிகள் வருகை குறைந்ததால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது.
பொள்ளாச்சி
ஓணம் பண்டிகை காரணமாக கேரள வியாபாரிகள் வருகை குறைந்ததால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது.
மாட்டு சந்தை
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். அதன்படி நேற்று நடைபெற்ற மாட்டு சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பெரும்பாலும் இங்கிருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்கி கேரளாவிற்கு இறைச்சி தேவைக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டதால் கேரளாவில் இருந்து வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்து இருந்தது. இதனால் மாடுகள் விற்பனை மந்தமானது. இதனால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் சந்தை நேற்று களை கட்டவில்லை.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
விற்பனை மந்தம்
பொள்ளாச்சி சந்தைக்கு கடந்த வாரம் செவ்வாய்கிழமை 3,500 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது. ஆனால் இந்த வாரம் 3 ஆயிரம் மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டதால் வியாபாரிகள் பெரும்பாலும் வரவில்லை. வழக்கமாக 250 வியாபாரிகள் வருவார்கள். ஆனால் ஓணம் பண்டிகை காரணமாக சுமார் 100 வியாபாரிகளே வந்திருந்தனர். இதனால் விற்பனை மந்தமானது.
காங்கயம் காளை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், பசு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மொரா ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், செர்சி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.