விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதால் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
தளி
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதால் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி
முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாதத்தின் 5-வது மாதமான ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று இந்த விழா விமர்சையாக எடுக்கப்படுகிறது. அன்றைய நாளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து கொழுக்கட்டை, பொரி, சுண்டல், தேங்காய், பழம், கரும்பு வைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள்.
பின்னர் 3 அல்லது 5 நாட்கள் கழித்து வாணவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமான ஒன்றாகும்.இந்த நிகழ்வானது ஆண்டு தோறும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகின்ற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.இதற்காக உடுமலை பகுதியில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாக்பவுடர், தேங்காய் மஞ்சி கொண்டு அச்சில் வார்த்து சிலைகளை வடிவமைத்து வர்ணம்பூசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.
விற்பனை
இந்த நிலையில் ரூ. 100 முதல் 10 ஆயிரம் வரையில் உயரத்துக்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உடுமலை பகுதியில் உள்ள சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் விநாயகர் சிலைகளை ஆர்வத்தோடு வாங்கி செல்கின்றனர்.