பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
பொங்கல் பண்டிகை
தை மாதம் முதல் தேதியன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரும்புதான். கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகையை நினைத்து பார்க்க முடியாது. இதேபோல் மஞ்சள் குலை, வாழைப்பழம், தேங்காய், அனைத்து வகையான காய்கறிகள், கிழங்கு வகைகள் உள்ளிட்டவற்றை படையலிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, பொங்கலோ... பொங்கல்... என மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை சந்தைகளிலும், கடைகளிலும் அமோகமாக நடைபெற்றது. கரும்புகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
பொருட்கள் விற்பனை
புதுக்கோட்டையில் உழவர் சந்தை அருகேயும், சாலையோரமும் ஆங்காங்கே கரும்புகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை காண முடிகிறது. இதில் 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.200 முதல் விற்பனையாகிறது. மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.20-க்கு விற்கப்படுகிறது. பொங்கலுக்கு பயன்படுத்தக்கூடிய பச்சரிசி ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது. வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், உலர் திராட்சை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கடையில் வாங்குகின்றனர். காய்கறிகளில் அனைத்து வகைகளிலும் குறிப்பிட்ட அளவு வாங்குகின்றனர். தேங்காய் ரூ.20 முதல் விற்கப்படுகிறது.
வாழைத்தார்கள்
வாழைப்பழங்கள் எண்ணிக்கை அடிப்படையிலும், 'சீப்' அடிப்படையிலும், முழுத்தார் அளவிலும் விற்பனையாகிறது. முழு வாழைத்தார் எடை அடிப்படையில் ரூ.600 முதல் விற்கப்படுகிறது. பூக்களில் மல்லிகை பூ வரத்து குறைந்ததால் கிலோ ரூ.2,500 முதல் விற்கப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. பொங்கல் பொருட்கள் அனைத்தும் சற்று விலை உயர்ந்து காணப்பட்டது. வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விளைந்த பலா, வாழை மற்றும் கரி வாழை, பரங்கிக்காய், பலா பிஞ்சு, கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய், உள்ளிட்ட காய்கறி வகைகளை கமிஷன் கடைகளில் விற்பனைக்காக ஏராளமான விவசாயிகள் கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். இதில் சிறிய அளவிலான பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.150-க்கும் பெரிய அளவிலான வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் விற்பனை ஆனது. சிறிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.100-க்கும், பெரிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பொங்கல் பானை, விறகு அடுப்பு, குழம்பு சட்டி, அகப்பை உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
மண் பானைகள்
ஆவுடையார்கோவில் அருகே உள்ள காராக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மண்பானைகளை தயார் செய்து கொண்டு வந்து ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவில் முன்பு பானைகளை அடுக்கி வைத்து, விற்பனை செய்து வருகிறார்கள். பொங்கல் வைப்பதற்காக இந்த மண்பானைகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர். இதனால் பானைகள் விற்பனை களை கட்டியது.