கள்ளக்குறிச்சியில் பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் தயாரித்து வைக்கப்பட்டது. பெரிய அளவிலான சிலைகள் முன்பதிவு செய்தவர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வீடுகளில் வைத்து பூஜை செய்யக்கூடிய சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள முக்கிய வீதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டது. இந்த சிலைகள் ரூ.100, ரூ.150, ரூ.200 என விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
பழ வகைகள்
அதேபோல் பூஜை பொருட்களை வாங்குவதற்காக கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்தனர். பின்னர் அவர்கள் விநாயகருக்கு படையல் செய்வதற்கு தேவையான வாழை பழம், இலை, தேங்காய், எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு, பூசணிக்காய் மற்றும் பழவகைகளை வாங்கிச்சென்றனர்.
மேலும் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப பல இடங்களில் சாமிக்கு படைப்பதற்காக தலா ஒரு ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, விளாங்காய், கம்பு, சோளம் என பொருட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு செட் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. அதனையும் ஏராளமானவர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
அலங்கார குடைகள்
இது தவிர அவல், பொரி, கடலை அடங்கிய பை ரூ.10, ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் அலங்கார குடைகள் ரூ.30, ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதேபோல் சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், தியாகதுருகம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மேலும் கோவில்கள், முக்கிய சாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்கும் சிலைகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.