ரம்புட்டான் பழங்கள் விற்பனை விறுவிறுப்பு
ரம்புட்டான் பழங்கள் விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது.
தமிழக-கேரளா எல்லை பகுதிகளில் அதிகம் விளையும் அபூர்வ பழமான ரம்புட்டான் சீசன் தற்போது அதிகமாக உள்ளது. இதுதவிர மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் இந்த ரம்புட்டான் பழங்கள் சீசன் களை கட்டியுள்ளது. இதன் காரணமாக ரம்புட்டான் பழங்களை வியாபாரிகள் அதிகமான அளவில் வாங்கி வந்து அதிக வெயில் சுட்டெரிக்கும் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சுவைக்கும் பழமாக உள்ளது. மிருதுவான முட்களுடன், உருண்டை வடிவில் ரப்பர் பொம்மை போல் காணப்படும் இந்த பழத்தை விரல்களால் அழுத்தி உடைத்தால், உள்ளே வெள்ளை அல்லது இளம் சிவப்பு நிறத்துடன் நுங்கு போன்று வழுவழுப்பாக இருக்கும் சுளையை விரும்பி சுவைக்கலாம். சில பழங்கள் சிறிது புளிப்புடன் அதிக இனிப்பாக இருக்கும். ஜூன் முதல் ஆகஸ்டு, செப்டம்பர் மாத இறுதிவரையிலான காலத்தில் ரம்புட்டான் சீசன் இருக்கும் என்பதால் தற்போது மாவட்டத்தில் ரம்புட்டான் பழங்கள் கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் பகுதியில் ரம்புட்டான் பழங்கள் கிலோவிற்கு ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. சீசன் அதிகமாக உள்ளதால் விலை குறைந்து கொண்டே வருகிறது. இதுகுறித்து திருச்சி சமயபுரத்தை சேர்ந்த வியாபாரி திவாகர் கூறியதாவது:- கேரளா, தமிழக எல்லை பகுதிகளில் இருந்து இந்த பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். மாவட்டத்தில் தற்போது கோடைவெயில் சுட்டெரிப்பதால் இந்த ரம்புட்டான் பழங்களை மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் கேரளாவில் இந்த ஆண்டு மழை குறைவு என்பதால் விளைச்சல் குறைவாக உள்ளது. இதன்காரணமாக விலை குறையவில்லை. இவ்வாறு கூறினார்.