முன்கூட்டியே உப்பு உற்பத்தி தொடங்க திட்டம்


முன்கூட்டியே உப்பு உற்பத்தி தொடங்க திட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2023 6:45 PM GMT (Updated: 1 Jan 2023 6:46 PM GMT)

மழை பெய்யாததால் முன்கூட்டியே உப்பு உற்பத்தி தொடங்கிட பாத்திகளை தயார் படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்

தேவிபட்டினம்,

மழை பெய்யாததால் முன்கூட்டியே உப்பு உற்பத்தி தொடங்கிட பாத்திகளை தயார் படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் அதிகமாகவே நடந்து வருகின்றது. தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தநேந்தல், உப்பூர், ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆனைகுடி மற்றும் சாயல்குடி அருகே வாலிநோக்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் ஏராளமான உப்பள பாத்திகள் உள்ளன.

இதனிடையே வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து தொடங்கியதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உப்பள பாத்திகளிலும் மழைநீர் தேங்கத் தொடங்கியதால் உப்பு உற்பத்தியும் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பணி தொடக்கம்

வடகிழக்கு பருவமழை சீசன் முடிவடைந்த நிலையில் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்யவில்லை. பருவமழை போதிய அளவு பெய்யாததால் தேவிபட்டினம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகளில் இந்த ஆண்டு முன்கூட்டியே உப்பு உற்பத்தி செய்யும் பணிகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோப்பேரி மடம் பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் உள்ள பாத்திகளில் தேங்கி நின்ற மழை நீரை அகற்றி மழை நீர் மற்றும் கல் உப்புகளாக இருந்த பாத்திகளில் உள்ள உப்பு படிவத்தை உடைத்து எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாத்திகளை சுத்தம் செய்யும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இது பற்றி உப்பள தொழிலாளி ஒருவர் கூறும்போது, ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் இருந்து உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கி செப்டம்பர் மாத இறுதியில் முடிவடைந்து விடும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் அதிகளவு மழை பெய்ததால் ஜனவரி மாத இறுதி வரையிலும் பாத்திகளில் மழைநீர் தேங்கி நின்றது.

சீசன் முடிவு

ஆனால் இந்த ஆண்டு பருவமழை அதிக அளவு பெய்யவில்லை. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக மழையே பெய்யாத நிலைதான் உள்ளது. இதனால் பாத்திகளிலும் மழை நீர் தேங்கவில்லை. பருவமழை சீசனும் முடிவடைய உள்ளதால் இனி மழை இருக்காது என்பதால் முன்கூட்டியே உப்பள பாத்திகளை தயார் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளோம். வழக்கமாக மார்ச் மாதத்தில் இருந்து தான் உப்பு உற்பத்தியை தொடங்குவோம். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பாத்திகள் முழுவதையும் தயார் செய்து பிப்ரவரி மாதத்தில் இருந்து உப்பு உற்பத்தி செய்யும் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.


Next Story