பாத்திகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்


பாத்திகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பாலைக்குடி, சம்பை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே உப்பு உற்பத்தி பணி தொடங்கியது. இதற்காக பாத்திகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி,

திருப்பாலைக்குடி, சம்பை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே உப்பு உற்பத்தி பணி தொடங்கியது. இதற்காக பாத்திகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் அதிகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாயல்குடி அருகே வாலிநோக்கம், ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆணைகுடி, தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் மற்றும் திருப்பாலைக்குடி, சம்பை, பத்தநேந்தல் உள்ளிட்ட ஊர்களில் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கும். மழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்துடன் இந்த பணிகள் முடிவடைந்து விடும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவு மழை பெய்யவில்லை. கடந்த 2 மாதத்திற்கு மேலாகவே முழுமையாக மழை பெய்யாததால் திருப்பாலைக்குடி, சம்பை, பத்தநேந்தல் உள்ளிட்ட பல ஊர்களிலும் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.

சமதளப்படுத்தும் பணி

இதற்காக திருப்பாலைக்குடி, சம்பை, பத்தநேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பள பாத்திகளில் தேங்கி நின்ற மழை நீர் மற்றும் மண்ணோடு கலந்து கிடந்த உப்பும் முழுமையாக அகற்றப்பட்டு பாத்திகள் அனைத்தும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது சுத்தம் செய்யப்பட்ட பாத்திகளில் சமதளப்படுத்துவதற்காக ஏராளமான பெண் தொழிலாளர்கள் பாத்தியில் இறங்கி நின்று காலால் பாத்தியை மிதித்து சமதளப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாத்தியில் உப்பு விளைச்சலுக்கு உகந்த ரசாயன உரமும் தண்ணீருடன் கலந்து அனைத்து பாத்திகளிலும் தெளிக்கப்பட்டு வருகின்றன.

முன்கூட்டியே

இதுபற்றி சம்பை கிராமத்தை சேர்ந்த உப்பள தொழிலாளி முனியசாமி கூறும்போது, வழக்கமாக பிப்ரவரி மாதம்தான் பாத்திகளை தயார் செய்து உப்பு உற்பத்தி செய்யும் பணிகளை தொடங்குவோம். ஆனால் இந்த ஆண்டு அதிகளவு மழை பெய்யாததால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பாத்திகளை தயார் செய்து உப்பு உற்பத்தி பணிகளை தொடங்க திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்து வருகிறோம் என்று கூறினார்.

உப்பு உற்பத்தி பணி முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளதால் அதை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்கள் தற்போது வேலைவாய்ப்பு கிடைத்து நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story