உப்பு உற்பத்தி சீசன் தொடக்கம்
திருப்புல்லாணி அருகே ஆணைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது.
திருப்புல்லாணி,
திருப்புல்லாணி அருகே ஆணைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது.
உப்பு உற்பத்தி
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி அருகே ஆணைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது.மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழில் அதிகமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக திருப்புல்லாணி அருகே உள்ள ஆணைகுடி, தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல ஊர்களிலும் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் நடந்து வருகின்றது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தொடங்கும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் முடிவடைந்து விடும்.
இந்த ஆண்டு உப்பு உற்பத்தி சீசன் தொடங்கியுள்ளது. திருப்புல்லாணி அருகே ஆணைகுடி கிராமத்தில் உள்ள அனைத்து உப்பள பாத்திகளிலும் கிணற்றிலிருந்து மோட்டார் வைத்து பாத்திகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு உப்பு விளைச்சலுக்கு தேவையான மருந்துகளும் தெளிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் ஆர்வம்
தற்போது அனைத்து பாத்திகளிலும் கல் உப்புகள் நன்கு உற்பத்தியாக தொடங்கிவிட்டன. ஒரு சில பாத்திகளில் உப்பு உற்பத்தியும் தொடங்கி விட்டதால் அந்த பாத்திகளில் உப்புகளை பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி உப்பள தொழிலாளி ஒருவர் கூறும்போது, கடந்த வாரத்தில் சில நாட்கள் பெய்த மழையால் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டது.
மழை முழுமையாக நின்று வெயில் தொடங்கி விட்டதால் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது உப்புக்கு நல்ல விலை கிடைத்து வருகின்றது. ஒரு டன் ரூ.3000 வரையிலும் விலை போகின்றது. கல் உப்புக்கு கடும் கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பானது தூத்துக்குடிக்கு அனுப்பப்படுகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.