வாலிநோக்கத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்
கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் வாலிநோக்கத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சாயல்குடி,
கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் வாலிநோக்கத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உப்பு உற்பத்தி
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் அதிகமாகவே நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆணைகுடி, தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல் உள்ளிட்ட ஊர்களில் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் நடைபெற்று வருகின்றது. மாவட்டத்திலேயே வாலிநோக்கம் பகுதியில் தான் அதிகமான உப்பள பாத்திகள் உள்ளதுடன், அதிக அளவில் உப்பு உற்பத்தியும் நடைபெறுகிறது.
தற்போது கோடைகால சீசன் தொடங்கிய நிலையில் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக வாலிநோக்கம் பகுதியில் அரசு உப்பு நிறுவனத்திற்கு சொந்தமாக ஏராளமான உப்பள பாத்திகள் உள்ளன. உப்பு உற்பத்தி செய்வதற்காக அரசு உப்பு நிறுவன நீரேற்று நிலையத்தில் இருந்து மோட்டார் மூலம் கடல் நீரானது பம்பிங் செய்து அருவி போல் ஓடையில் விழுந்து அனைத்து உப்பள பாத்திகளுக்கும் கொண்டுவரப்படுகின்றது.
விறுவிறுப்பு
பாத்திகளில் தேங்கி நிற்கும் கடல் நீரில் இருந்து கல் உப்பு உற்பத்தி செய்யும் பணியிலும், தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கல் உப்பு உற்பத்தி செய்வதற்காக வாலிநோக்கம் கடல் பகுதியில் இருந்து மோட்டார் மூலம் கடல்நீர் பம்பிங் செய்து அருவி போல் விழுந்து பாத்திகளுக்கு கொண்டு செல்லப்படுவது பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கிறது. வாலிநோக்கம் பகுதியில் அரசு உப்பு நிறுவனத்தை தவிர்த்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான உப்பள பாத்திகளிலும் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கல் உப்பு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், மருந்து பொருட்கள் தயாரிக்கவும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதை தவிர அரசு உப்பு நிறுவனத்தில் கல் உப்புகள் அயோடின் பாக்கெட்டுகளாகவும் அடைத்து பேக்கிங் செய்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.