உப்பூர், திருப்பாலைக்குடி பகுதியில் உப்பு உற்பத்தி மும்முரம்


உப்பூர், திருப்பாலைக்குடி பகுதியில் உப்பு உற்பத்தி மும்முரம்
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:45 PM GMT)

அக்னி நட்சத்திரத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் உப்பூர், திருப்பாைலக்குடி பகுதியில் உப்பு உற்பத்தி மும்முரம் அடைந்து உள்ளது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்.

அக்னி நட்சத்திரத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் உப்பூர், திருப்பாைலக்குடி பகுதியில் உப்பு உற்பத்தி மும்முரம் அடைந்து உள்ளது.

உப்பு உற்பத்தி தொழில்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் மாவட்டத்தில் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. குறிப்பாக சாயல்குடி அருகே வாலிநோக்கம், ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆனைகுடி, தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் உள்ளிட்ட ஊர்களில் உப்பு உற்பத்தி செய்வதற்கு ஏராளமான பாத்திகள் அமைந்துள்ளன.

அதுபோல் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கோடைகால சீசன் தொடங்கியதும் இந்த பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் தொடங்கி விடும். செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும்.

அக்னி வெயில் அதிகரிப்பு

இதனிடையே இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.அது போல் மே மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு வாரத்திற்கு மேலாகவே தொடர்ந்து பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் கடுமையாகவே பாதிக்கப்பட்டது.பாத்திகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.

இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு மேலாகவே அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உப்பு உற்பத்தி மும்முரம் அடைந்துள்ளது.

திருப்பாலைக்குடி, பந்தனேந்தல், உப்பூர், சம்பை உள்ளிட்ட ஊர்களில் உள்ள பாத்திகளில் கல் உப்பை உற்பத்தி செய்யும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாத்திகளில் இருந்து கல் உப்புகளை பிரித்தெடுத்து பாத்தி அருகே மலைபோல் குவித்து வருகின்றனர். அதுபோல் உற்பத்தி செய்யப்பட்ட கல் உப்புகளை ஒரு கிலோ பாக்கெட்டுகளாகவும் பேக்கிங் செய்யும் பணியிலும் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story