தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை பெருக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை பெருக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 5-வது தேசிய உப்பு மாநாடு தூத்துக்குடியில் இன்று நடந்தது. இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி நாட்டில் 2-வது இடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 79 சதவீத உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே 9 சதவீதம் மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
எனவே, குஜராத் மாநில உப்பு உற்பத்தியாளர்கள் கடைபிடிக்கும் உத்திகள், தொழில்நுட்பம் போன்றவற்றை இங்கே உள்ள உற்பத்தியாளர்களும் பின்பற்றி உப்பு உற்பத்தியை பெருக்க வேண்டும். இங்கே உள்ள குறைபாடுகள் என்ன, அவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை அறிய இந்த மாநாடு உதவும்.
உப்புத் தொழிலை நவீனப்படுத்த, புதிய தொழில்நுட்பங்களை புகுத்த, உப்பில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும். இந்த தொழிலுக்கு இளைஞர்கள் அதிகம் வரவேண்டும். இந்த தொழிலை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.