"இந்த நாடே சமத்துவபுரமாக திகழ வேண்டும்"


இந்த நாடே சமத்துவபுரமாக திகழ வேண்டும்
x

“இந்த நாேட சமத்துவபுரமாக திகழ வேண்டும் என்ற தலைவர் கருணாநிதியின் எண்ணத்தை நனவாக்குவோம்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சிவகங்கை

சிவகங்கை,

"இந்த நாேட சமத்துவபுரமாக திகழ வேண்டும் என்ற தலைவர் கருணாநிதியின் எண்ணத்தை நனவாக்குவோம்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

புதிய திட்டப்பணிகள்

சிவகங்கை மாவட்டம் காரையூரில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் விழா மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நேற்று நடந்தது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்., பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி அவர் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கோட்டை வேங்கைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து விட்டு இங்கு நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறேன்.

வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். யாருக்கும் அஞ்சாத முத்துவடுகநாதர். அவரது மரணத்திற்கு பிறகு தனது தாலியை காணிக்கையாக்கி களத்தில் குதித்த வீரமங்கை வேலுநாச்சியார். அவர்களுக்கு பிறகு அவரது மகள் வெள்ளைநாச்சியார். இவர்கள் மண்ணை காக்க செய்த தியாகம்தான், இந்த சிவகங்கை பூமி என்று பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

மருது சகோதரர்கள்

இந்தியாவின் விடுதலைக்காக போராட்டத்தில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்த மண்தான், இந்த சிவகங்கை சீமை. வீரத்திற்கு மருது சகோதரர்கள், கவிதைக்கு கவியரசர் கண்ணதாசன், இறையன்புக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் என இந்த தமிழ்நாட்டிற்கு பெரும் மதிப்புமிக்கவர்களை வாரிவழங்கிய மண்.

அத்தகைய சிறப்புமிக்க இந்த மண்ணில் அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களை வழங்க இங்கு வந்துள்ளேன்.

இந்த மாவட்டத்தின் அமைச்சர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான பெரியகருப்பன். அவர் பெயரை போலவே பெரிய விழாவாக இங்கு நடத்தி கொண்டிருக்கிறார். சிவகங்கை மாவட்டம் கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் தந்தை பெரியார் பெயரில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து உள்ளேன். கருணாநிதியின் கனவு திட்டத்தில் ஒன்றுதான் சமத்துவபுரம் திட்டம்.

சமூக நீதி

தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளை செயல்படுத்தக்கூடிய விதமாக சமத்துவபுரங்கள் சமூக நீதியை நிலைநாட்டி அனைத்து சமுதாய மக்களும் சாதி மத பேதமின்றி சமுதாயத்தில் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக சமத்துவபுரத்தில் வாழ வேண்டும் என்று தலைவர் கருணாநிதி கனவு கண்டார்.

அதன்விளைவாக 1997-ம் ஆண்டு தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரத்தை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சமத்துவபுரத்தை கட்டி சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு புதிய வழியை காட்டினார். இந்த சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 9 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன. அதில் 8 சமத்துவபுரங்கள் அன்றைக்கு நாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோதே திறந்து வைக்கப்பட்டது.

இந்த கோட்டைவேங்கைப்பட்டி சமத்துவபுரமும் முன்கூட்டியே செயல்பட்டு இருக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் இந்த சமத்துவபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த நிலையில்தான் தற்போது நம்முடைய அரசு வந்த பிறகு 3.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுமையாக புனரமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு இன்றைக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மக்களுக்கான திட்டங்களை கடந்த அ.தி.மு.க. அரசு எப்படி எல்லாம் பாழ்படுத்தி உள்ளது என்பதை நீங்கள் பார்க்கலாம். கடந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் அரசியல் உள்நோக்கம் கொண்ட அரசாக இருந்ததால்தான் இப்படி செய்தார்கள். சமத்துவபுரத்தில் 12 ஏக்கர் நிலத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

என்னென்ன வசதிகள்

ஒவ்வொரு வீடும் 290 சதுர அடியில் 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது. அங்கு குடிநீர்வசதி, மின்வசதி, மழைநீர் சேகரிப்புதொட்டி, கழிப்பிட வசதி, வீட்டு காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம், வீட்டிற்கு 2 தென்னை மரங்கள், இவ்வாறு 5 சென்ட் பரப்பளவில் உருவாக்கப்பட்டு உள்ளது.

15 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டு உள்ளது. அறிஞர் அண்ணா விளையாட்டு திடல், குழந்தைகள் விளையாட கலைஞர் சிறுவர் பூங்காவும், முகப்பில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கடையும் உள்ளது.

அனைத்து தெருக்களிலும் மின்விளக்குகள், மழைக்காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. 54 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அனைத்து தெருக்களும் தார் சாலைகளாக போடப்பட்டு உள்ளன. அங்கன்வாடி மையம் மற்றும் நூலகம் போன்றவையும் உள்ளன.

கருணாநிதியின் எண்ணத்தை நனவாக்குவோம்

இது எல்லாம் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழவும், ஒருமித்த கருத்துடன் வாழவும் முன்னெடுக்கப்பட்ட திட்டம். சமத்துவபுரத்தில் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து, இந்த நாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இந்த நாடே சமத்துவபுரமாக திகழ வேண்டும் என்ற தலைவர் கருணாநிதியின் எண்ணத்தை நனவாக்குவோம்.

சமத்துவபுர திறப்புவிழா மட்டுமல்ல, பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படக்கூடிய விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.63 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் 51 திட்டப்பணிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.42 கோடியே 48 லட்சத்தில் 69 பணிகளும், நீர்வளத்துறை சார்பில் ரூ.7 கோடியிலான திட்டப்பணியும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4 கோடியே 95 லட்சம் மதிப்பிலான திட்டப்பணியும், மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பில் 5 பணிகள் என மொத்தம் ரூ.119 கோடியே 68 லட்சம் மதிப்பில் 127 பணிகளுக்கு உங்கள் முன்னால் அடிக்கல் நாட்டி உள்ளேன்.

மேலும் இங்கு ரூ.24 கோடியே 77 லட்சம் மதிப்பில் 44 பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்றைக்கு இந்த விழாவின் மூலம் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 59 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு ரூ.136 கோடியே 45 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திராவிட மாடல்

அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும், கடைக்கோடியில் இருக்கக்கூடிய குடிமகனுக்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய லட்சியம். நோக்கம். இந்த நோக்கம் என்பது பேரறிஞர் அண்ணா சொன்ன ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்கிற அந்த முழக்கம். அந்த முழக்கத்தைத்தான் நாம் திட்டங்களின் வாயிலாக செயல்படுத்தி வருகிறோம்.

இந்த திட்டங்களுக்கு எல்லாம் கூட்டாக ஒரு பெயரிட வேண்டும் என்றால், அதுதான் திராவிட மாடல். அரசின் திட்டங்களின் பயன் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்று சேருவதை நம்முடைய அரசு உறுதி செய்யும். இங்குள்ள கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதனை நாள்தோறும் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்.

நற்சான்று

புதிய திட்டபணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதை வழக்கமாக வைத்து கொண்டிருக்கிறேன். இப்படி ஒவ்வொரு மாவட்டமாக நானே நேரடியாக சென்று மக்களை சந்தித்து வருகிறேன். நான் செல்லும் இடமெல்லாம், வழியெங்கும் சாலையோரங்களில் மக்கள் நின்று கொண்டு மகிழ்ச்சியுடன் கையை அசைத்து கர ஒலி எழுப்பி, வணக்கம் செலுத்தி, ஆரவாரத்தோடு வரவேற்கிறார்கள். அவர்களை பார்க்கிறபோது இதுதான் இந்த ஆட்சிக்கும், எனக்கும் தரப்படக்கூடிய நற்சான்று என்று நான் கருதுகிறேன்.

சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இருந்ததைவிட, இப்போது அதிகமான அளவு மூன்று மடங்கு, நான்கு மடங்கு எழுச்சி இன்றைக்கு மக்களிடத்தில் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்றால் மக்களுக்கு மிகமிக உண்மையாக இருப்பது. மக்களுக்கு நேர்மையான ஆட்சியை வழங்குவதுதான் முக்கிய காரணம்.

முக்கிய இலக்கணம்

தேர்தலுக்கு முன்னால், எப்படி மக்களை சந்தித்து வந்தேனோ அதைவிட அதிகமாக இப்போது நான் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். மக்களை தொடர்ந்து சந்திப்பது ஆட்சியாளர்களின் மிக முக்கியமான இலக்கணமாக நான் கருதுகிறேன்.

இந்திய குடியரசு துணைத்தலைவரும், பழுத்த அனுபவம் கொண்ட நாடாளுமன்றவாதியுமான வெங்கையா நாயுடுவை அண்மையில் கருணாநிதியின் சிலையை திறக்க அழைத்து இருந்தோம். அவரும் மகிழ்ச்சியோடு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் எந்த வகையில் தலைவர் கருணாநிதி, ஆட்சி நடத்தினார் என்பதை சுட்டிக்காட்டி பெருமைப்படுத்தி பேசினார். மேலும் அவர் வழித்தடத்தில் இப்போதைய முதல்-அமைச்சரும் ஆட்சி நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்டதுதான் நமக்கு பெருமை.

இதனை என்னுடைய வாழ்வில் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பாராட்டாக நான் கருதுகிறேன். தலைவர் கருணாநிதியின் இடத்தை நான் நிரப்பி விட்டேன் என்று சொல்லவில்லை. அவரது இடத்தை யாராலும் எந்த கொம்பனாலும் நிரப்பிட முடியாது. ஆனால் அவரை போல் கடந்த ஓராண்டு காலமாக என்னுடைய செயல்பாடு அமைந்து உள்ளதாக குடியரசு துணைத்தலைவர் பாராட்டி இருப்பதை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.

"தமிழ் சமுதாயத்துக்கு என்னால் முடிந்த வரை உழைத்து விட்டேன். எனக்கு பிறகு யார் என்று கேட்டால் தம்பி ஸ்டாலின்தான்" என்று தலைவர் கருணாநிதி ஒருமுறை சொன்னார். அந்த நம்பிக்கையை இந்த ஓராண்டு காலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன். இனியும் தொடர்ந்து காப்பாற்றுவேன். 5 ஆண்டுகளில் செய்யவேண்டியதை இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம். இது ஏதோ ஆரம்ப கட்ட வேகம் என்று நீங்கள் நினைக்கலாம்.

எப்போதும் இதே சுறுசுறுப்புடனும், இதே வேகத்துடனும்தான் நான் இருப்பேன். மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும்தான் என்னை இத்தகைய சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் பணியாற்ற வைக்கிறது. ஒவ்வொருவரும் காட்டும் அன்பிலும் அரவணைப்பிலும்தான் தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணும்.

பெண் காவல் பயிற்சி கல்லூரி

இங்கு எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசுகையில், நாங்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து விட்டீர்கள். தற்போது ஒரு கோரிக்கை வைக்கிறேன், அதை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கூறியுள்ளார். யாரிடத்தில் சொன்னால் அது நடக்கும் என்று தெரிந்து நீங்களும் சொல்கிறீர்கள்.

வீரமங்கை வேலு நாச்சியாரை போற்றும் வகையில் சிவகங்கை நகரை தலைமையிடமாகக் கொண்டு, வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் காவல் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். நியாயமான கோரிக்கை. நாளையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்துபேசி, ஆய்வு நடத்தி அதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், ரகுபதி, ராஜகண்ணப்பன், மெய்யநாதன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி,, ஊரக வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் அமுதா, கலெக்டர் மதுசூதன்ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story