சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு


சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு கூறினார்.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தகூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிள்களும் அடிக்கடி திருடு போகும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2-வது ஆடி வெள்ளிக்கிழமையில் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் பாதுகாப்பிற்கு குறைவான போலீசாரே இருந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு கூறுகையில், பக்தர்களை பாதுகாக்கும் வகையில் ராஜகோபுரம் நுழைவு வாயில் அருகே நிரந்தரமாக போலீஸ் பூத் அமைத்து, அதில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசாரை ஈடுபடுத்துவது, கோவில் பிரகாரத்தில் மதில் சுவரை ஒட்டி போடப்பட்டுள்ள கடைகள், சன்னதி வீதியின் எதிரே பக்தர்களுக்கு இடையூறாக போடப்பட்டுள்ள கடைகளை அகற்றுவது, பக்தர்களை கோவிலுக்குள் அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், கோவில் கண்காணிப்பாளர் காளியப்பன் ஆகியோர் கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டனர்.


Next Story