சம்பா, தாளடி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்


சம்பா, தாளடி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்
x

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்திற்கு ஏற்ற நெல்ரகங்களை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்திற்கு ஏற்ற நெல்ரகங்களை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பரிந்துரை செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சம்பா, தாளடி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு உயர் விளைச்சல் திறன் கொண்ட கீழ்கண்ட நெல் ரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. சி.ஆர். 1009 ரகம் 160 நாட்கள் வயதுடையது. எக்டேருக்கு 6 டன் விளைச்சல் தரும். சம்பா பருவத்தில் இந்த ரகமே அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. சி.ஆர். 1009 சப்-1 ரகம் 155-160 நாட்கள் வயதுடையது. எக்டேருக்கு 5,759 கிலோ மகசூல் தரவல்லது. நீர் தேங்கும் பள்ளக்கால் பகுதிகளுக்கு ஏற்ற ரகம். 15 நாட்கள் வரை வெள்ளத்தால் எந்த பாதிப்புமின்றி வளரும் தன்மை கொண்டது.

ஆடுதுறை ரகங்கள்

சொர்னா சப்-1 ரகம் வெள்ளத்தை தாங்கக்கூடிய ஒரு நெல் ரகம். இது திருந்திய நெல் சாகுபடிக்கு ஏற்றது. இந்த ரகம் எக்டேருக்கு 4.5-5.5 டன் அளவிற்கு மகசூல் தரவல்லது. ஆடுதுறை 40 ரக நெல் 145-150 நாட்கள் வயதுடையது. நீர்த்தேங்கும் பள்ளக்கால் பகுதிகளுக்கு ஏற்ற ரகம். எக்டேருக்கு 5.5 டன் விளைச்சல் தரும். இதேபோல ஆடுதுறை-44, 46, 49, 50, 51, 54 ஆகிய நெல் ரகங்கள் நல்ல விளைச்சலை தரும். இந்த நெல் ரகங்கள் தண்ணீர் வசதியுள்ள அனைத்து இடங்களிலும் வளரும்.

கோ-45

கோ-45 என்ற ரகம் 135-140 நாட்கள் வயதுடையது. நீண்ட சன்ன வெள்ளை அரிசி. எக்டேருக்கு 5.5 டன் விளைச்சல் தரும். கோ-49 ரகம் 130-135 நாட்கள் வயதுடையது. எக்டேருக்கு 6.3 டன் விளைச்சல் தரும். கோ-50 ரக நெல் 130 முதல் 135 நாட்களில் வளரும். இந்த ரகம் சம்பா, பின் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு ஏற்ற ரகமாகும். களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற இது சாயாத தன்மை கொண்டது. கோ-52 ரக நெல், 130-135 நாட்கள் வயதுடையது. எக்டேருக்கு 6.2 டன் விளைச்சல் தரும்.

டி.கே.எம்.-13

டி.கே.எம்.-13 ரக நெல், 130 நாட்கள் வயதுடையது. எக்டேருக்கு 5.9 டன் விளைச்சல் தரும். களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற ரகம். டி.ஆர்.ஒய்.-4 ரக நெல், 125-130 நாட்கள் வயதுடையது. களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற இது சாயாத தன்மை கொண்டது. எக்டேருக்கு 5.7 டன் விளைச்சல் தரும். தங்களது நிலங்களுக்கு ஏற்றவாறு விவசாயிகள் மேற்கண்ட நெல் ரகங்களை தேர்ந்தெடுத்து விதைத்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த பரிந்துரையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story