திருமங்கலம் சந்தையில் ஒரே நாளில்ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆயிரக்கணக்காேனார் குவிந்ததால் சந்தை களைகட்டி காணப்பட்டது.
திருமங்கலம்,
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆயிரக்கணக்காேனார் குவிந்ததால் சந்தை களைகட்டி காணப்பட்டது.
ஆட்டுச்சந்தை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், சோழவந்தான் சாலையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். தமிழகத்தில் உள்ள பெரிய சந்தைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆட்டுச்சந்தையில் சாதாரணமாக ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனையாகின்றன.
மதுரை மட்டுமின்றி விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடுகள், கோழிகளை வாங்கிச் செல்கிறார்கள்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு சந்தை தொடங்கியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், இதை முன்னிட்டு ஆட்டுச்சந்தையில் வழக்கத்தைவிட நேற்று அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. வழக்கமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படும் கிடாய்கள் நேற்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆடுகள் வரத்து அதிகம்
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-
உள்ளூர் ஆட்டு இனங்கள் மட்டுமிள்றி குறும்பை, கொங்கு, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்க்கப்படும் கிடாய் ரங்களையும் திருமங்கலம் சந்தையில் வாங்கலாம்.
கிடாய் சண்டைக்கு வளர்க்கும் குட்டிகளும் இங்கு கிடைக்கும். பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. 60 கிலோ எடையுள்ள ஒரு கிடாயின் விலை ரூ.90 ஆயிரம் வரை கூட விற்பனை ஆனது.
கிடாய் முட்டு போட்டிக்கான ஆடுகள் ரூ.45 ஆயிரம் வரை விற்பனை ஆகின. வியாபாரம் வழக்கதைவிட களைகட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிகமானோர் திரண்டதால் சந்தைக்கு வெளியேயும் வியாபாரம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.