சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோஷ்டியூர் கோவில்

திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். 108 திவ்ய ஸ்தலங்களுக்கு ஒன்றான சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் தென் தமிழகத்தில் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக தெப்பத் திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. மூலவரான ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் விமானம் தங்க கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் ராஜகோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த 23-ந்தேதி இரவு முதற்கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 2-ம் காலபூஜை, மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 25-ந் தேதி காலை 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜையும், 7-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இன்று 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

அதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.55 மணியளவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது, இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றுவதை கண்டு தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்தையொட்டி நாலு வட்டகை யாதவர் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு சவுமிய நாராயண பெருமாள் தங்க கருட வாகனத்திலும், திருக்கோஷ்டியூர் நம்பிகள் மற்றும் எம்பெருமானார் தங்க பல்லக்கிலும் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story