அய்யனாரப்பன் கோவிலில் சாமி சிலைகளை உடைத்து சேதம்


அய்யனாரப்பன் கோவிலில் சாமி சிலைகளை உடைத்து சேதம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே அய்யனாரப்பன் கோவிலில் சாமி சிலைகளை உடைத்து சேதம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் விராட்டிக்குப்பம் ஏரிக்கரை மேட்டில் பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் கோவில் உள்ளது. நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அப்போது அய்யனாரப்பன் சாமி சிலையின் வலது கையில் இருந்த அரிவாளை உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்ததோடு சிலையின் வலது கையும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அங்கிருந்த குதிரை சிலையின் காது, கால் பகுதியும், பாதுகாப்பு வீரனின் சிலையும் மற்றும் கருங்கல்லால் ஆன சிறிய அளவிலான பூரண பொற்கலை, அய்யனாரப்பன் சாமிகளின் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சேதமடைந்த சாமி சிலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். யாரோ மர்ம நபர்கள், செங்கற்களை வீசி சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story