அகத்தீஸ்வரன் கோவிலில் சாமி சிலைகள், கலசம் திருட்டு
திண்டிவனம் அருகே அகத்தீஸ்வரன் கோவிலில் சாமி சிலைகள், கலசம் திருட்டு தொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது சிலை தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டிவனம்,
சென்னை அசோக்நகரில் உள்ள வடக்கு மண்டல சிலை தடுப்பு பிரிவில் சாரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பஞ்சலோக சிலைகள், கற்சிலைகள் உள்ளன.
இந்த கோவிலில் பரம்பரை அறங்காவலராக தாஸ் என்பவர் இருந்து வந்தார். இந்த கோவிலை புதுப்பிப்பதற்காக இந்து சமய அறிநிலையத்துறை கடந்த 2010-ம் ஆண்டு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியது. இருப்பினும் தாஸ் வெளியூரில் வசித்து வந்ததால், எங்கள் ஊரை சேர்ந்த தனசேகர் என்பவரிடம் கோவில் சீரமைப்பு பணி ஒப்படைக்கப்பட்டது.
சிலைகள் திருட்டு
இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு கோவிலில் இருந்த கலசத்தை காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே அறநிலையத்துறை சார்பாக ஒதுக்கப்பட்ட பணம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து வசூல் செய்த பணம் கொண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கிராம மக்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவிலில் இருந்து பச்சைகல் முருகர் சிலை, சுமார் 4 அடி உயரம் கொண்ட 2 துவாரபாலகர் சிலைகள், பழனி ஆண்டவர் பஞ்சலோக சிலை ஆகிய 4 சிலைகள் காணவில்லை.
இதுபற்றி தனசேகரிடம் ஊர் பொதுமக்கள் கேட்டபோது, யார் திருடிச் சென்றார்களோ, அது பற்றி எனக்கு தெரியாது என கூறினார். இது குறித்து போலீஸ் நிலையம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோவில் திருப்பணி தனசேகர் மேற்பார்வையின் கீழ் வந்த பிறகு தான் கலசமும், சிலைகளும் திருடுபோய் உள்ளது. தனசேகரின் சகோதரர் மோகன் என்பவர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.
வழக்குப்பதிவு
மேலும் கோவிலில் நள்ளிரவு வரை தனசேகர், அவரது மகன் கலை அரசன், மோகன் ஆகியோர் இருப்பார்கள். எனவே சிலை மற்றும் கலசம் திருட்டில் அவர்கள் 3 பேருக்கும் தொடர்பு இருக்கலாம் என பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கருதுகிறார்கள். சிலைகள் திருடு போய் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். அதன் பேரில் தனசேகர், மோகன், கலை அரசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.