பழமையான கோவிலில் சாமி சிலை திருட்டு
ஆலாந்துறை நல்லூர் வயல்பதியில் பழமையான கோவிலில் இருந்த சாமி சிலை திருட்டுபோனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலாந்துறை
ஆலாந்துறை நல்லூர் வயல்பதியில் பழமையான கோவிலில் இருந்த சாமி சிலை திருட்டுபோனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாமி சிலை திருட்டு
கோவை ஆலாந்துறை அருகே நல்லூர் வயல் என்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மசஓரம்பு பள்ளம் அருகே பழமை வாய்ந்த சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. இங்கு சடையாண்டியப்பன், காளியம்மன், நாகாத்தம்மன், வேட்டைக்காரன், செல்வவிநாயகர், கூத்தாடி கருப்பராயன் ஆகிய சன்னதிகள் உள்ளது. மலையடிவாரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த ராம்கணேஷ் (வயது 28) என்பவர், பூஜை செய்து வருகிறார்.
இந்த நிலையில், வழக்கம் போல பூஜை செய்வதற்கு நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றார். அப்போது, கோவிலில் இருந்த 2½ அடி உயரமுள்ள கூத்தாடி கருப்பராயன் சாமி கல்சிலை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து காருண்யா நகர் போலீசில் புகார் அளித்தார். சாமி சிலை திருட்டுபோனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டனம்
இந்த சம்பவம் குறித்து இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 500 ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவிலில் சிலை மாயமாகி உள்ளது. இது சமூக விரோதிகள் சிலரால் நடந்திருக்கலாம் என இந்து முன்னணி சந்தேகிக்கிறது. இக்கோவில் 3 முறை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சிலையை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுப்பட்டிருந்தது.
இதேபோல பல்வேறு இந்து அமைப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.