ஆற்றில் மீன்பிடி வலையில் சிக்கிய சாமி சிலைகள்; அரசு கருவூலத்தில் ஒப்படைக்க முடிவு
ஆற்றில் வாலிபர்கள் வீசிய மீன்பிடி வலையில் 5 சாமி சிலைகள் சிக்கின. அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.
சாமி சிலைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் மருதேரி கிராமத்தையொட்டி தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள் ஆற்றுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் மருதேரி தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை அருகே அகரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மீன்பிடி வலையை விரித்தனர். அப்போது வலையை எடுக்க முயன்றபோது கனமாக இருந்ததால் இழுக்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து வாலிபர்கள் ஆற்றுக்குள் இறங்கி வலையை இழுத்து பார்த்தபோது அதில் 5 சாமி சிலைகள் சிக்கி இருந்தது தெரியவந்தது.
கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்
இதையடுத்து ஆற்றில் இருந்து கரைக்கு சாமி சிலைகளை கொண்டு வந்த வாலிபர்கள் இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போச்சம்பள்ளி தாசில்தார் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று சாமி சிலைகளை மீட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு அடி நீளமும், 5 கிலோ எடையும் கொண்ட பெருமாள், ஆஞ்சநேயர், முருகன், கருப்பசாமி மற்றும் வீரபத்திர சாமி சிலைகள் என தெரியவந்தது. இதுகுறித்து தாசில்தார் அனிதா கூறுகையில், தென்பெண்ணை ஆற்றில் மீட்கப்பட்ட 5 சாமி சிலைகள் தொடர்பாக கிருஷ்ணகிரி தொல்லியல் துறை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜை
தொல்லியல் துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே ஆற்றில் மீட்கப்பட்டது ஐம்பொன் சிலைகளா? அல்லது வேறு சிலைகளா? என்பது தெரியவரும். அதன்பின்னர் 5 சாமி சிலைகளும் போச்சம்பள்ளி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்னர் உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இதற்கிடையே தாசில்தார் அலுவலகத்தில் 5 சாமி சிலைகளுக்கும் சிறப்பு பூஜை செய்து அலுவலக ஊழியர்கள் வழிபட்டனர்.