இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சாமி வாகன பவனி நடந்தது
அர்ச்சனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் சாமி வாகன பவனி நடத்தப்பட்டது.
அழகியபாண்டியபுரம்:
அர்ச்சனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் சாமி வாகன பவனி நடத்தப்பட்டது.
அர்ச்சனை செய்வதில் பிரச்சினை
இறச்சகுளத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான எருக்கலங்காவுடைய கண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் தினமும் சாமி வாகன பவனி நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுவாமி வாகன பவனி நடந்தது. இதில் ஒரு பிரிவினர் சாமி வாகன பவனியை எடுத்து வர தயாராக இருந்த போது மற்றொரு பிரிவினர் எங்களுக்கு சாமி தரிசனம் செய்ய அர்ச்சனை தட்டு வாங்க வேண்டும் என கூறினர். ஆனால் இதற்கு சாமி வாகன பவனியை எடுத்து வருகிறவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நடந்தது
இந்த சாலை மறியல் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த பிரச்சினை தொடர்ந்து காலையில் பேசிக் கொள்ளலாம் என கூறியதால் அவர்கள் மறியலை கைவிட்டனர்.
நேற்று காலையில் இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சாமி வாகன பவனியை ஒரு பிரிவினர் நடத்தவில்லை.
இதனை தொடர்ந்து மாலையில் 4 துணை சூப்பிரண்டுகள் தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டது. பின்னர் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சாமி வாகன பவனி போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. அப்போது அனைவரும் சாமிக்கு அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.