அரிவாள் ஏணி மீது நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடி


அரிவாள் ஏணி மீது நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடி
x
தினத்தந்தி 24 Feb 2023 6:45 PM GMT (Updated: 24 Feb 2023 6:45 PM GMT)

காரைக்குடி சக்தி வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவில் அரிவாள் ஏணி மீது நின்று சாமியாடி அருள்வாக்கு கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி சக்தி வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவில் அரிவாள் ஏணி மீது நின்று சாமியாடி அருள்வாக்கு கூறினார்.

சக்தி வீரமாகாளியம்மன் கோவில்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியில் சக்தி வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பூக்குழி திருநடன உற்சவ விழா நடைபெறும். இந்த விழாவில் 9-ம் நாள் அன்று அந்த கோவில் பகுதியில் உள்ள திடலில் அரிவாள் ஏணி மீது சாமியாடி நின்று, பக்தர்களை நோக்கி பூக்களை வீசி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பர்மாகாலனி பகுதியில் உள்ள திடலில் 11 அரிவாள்களை படிகளாக்கி ஏணி உருவாக்கப்பட்டது.

சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து, அந்த திடலில் எழுந்தருளினார்.

அதைத்தொடர்ந்து சாமியாடி, அரிவாள் ஏணி மீது ஏறிச் சென்றார். அதன் உச்சியில் நின்றும், அமர்ந்து கொண்டும், பூக்களை பக்தர்களை நோக்கி தூவியபடி அருள்வாக்கு கூறினார். அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் மீண்டும் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 10-ம் நாள் விழாவான நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story