சனாதன பேச்சு சர்ச்சை: உத்தரபிரதேசத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
சனாதன பேச்சு சர்ச்சை தொடர்பாக உத்தரபிரதேசத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரது பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம்சிங் லோதி ஆகியோரின் புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.