சனாதனம் என்பது சாதிகள் மூலம் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குகிறது- துரை வைகோ
சனாதனம் என்பது சாதிகள் மூலம் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குகிறது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார்.
மதுரை ,
மதுரை வலையங்குளத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடந்தது.
இதில், மதிமுக முதன்மை கழகச் செயலாளர் துரை வைகோ பேசியதாவது:-
சனாதனம் என்பது சாதிகள் மூலம் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குகிறது. நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் சனாதனம் என்பது நீ உயர்ந்தவர் நான் தாழ்ந்தவர் என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. சனாதான கலாசாரம் குலக்கல்வியை வலியுறுத்துகிறது. உயர்ந்தவருக்கு ஒரு வேலை தாழ்ந்தவர்க்கு ஒரு வேலை என்ற மனப்பான்மையை வழங்குகிறது.
இது, பெண் விடுதலைக்கு எதிராகவும், குழந்தை திருமண சட்டத்தை ஆதரித்தும், உடன்கட்டை ஏறுவதை ஆதரித்து இருக்கிறது. சனாதனத்தை அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றவர்கள் எதிர்த்தனர். திராவிட இயக்கங்களும் எதிர்த்தது.
நாங்கள் இந்து மதத்தையும், இந்து மதத்தை பின்பற்றுவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. சனா தான கோட்பாடுகளை தான் எதிர்க்கிறோம். திராவிட இயக்கங்களால் சனாதானத்தை அழிக்க முடியும். 50 வருடங்களுக்கு முன்பே சனாதனம் எனும் கொடிய விலங்கின் முதுகெலும்பை அண்ணா, பெரியார் போன்றவர்கள் ஒடித்தனர். தமிழகத்தில் தீண்டாமை சாதி கொடுமை இருப்பதற்கு காரணம் பா.ஜ.க.. மதவாத இயக்கங்கள் இருக்கும் வரை சாதிய கொடுமைகள் இருக்கத்தான் செய்யும். எனவே சனாதனத்தை வேறருக்க வேண்டியது
ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். கட்சியின் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கிடையாது. எந்த பதவிகள் வழங்கினாலும் ம.தி.மு. க தொண்டர் என்று கூறுவது தான் எனக்கு பெருமை..
இவ்வாறு அவர் கூறினார்.