குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து மாவில் மணல் - பெற்றோர்கள் அதிர்ச்சி


குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து மாவில் மணல் - பெற்றோர்கள் அதிர்ச்சி
x

செங்கல்பட்டு அருகே அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து மாவில் மணல் கலந்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 75-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையங்களுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் சார்பில் மாதம் தோறும் 2 கிலோ அளவு கொண்ட ஊட்டச்சத்து மாவு பாக்கெட் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பெருமாட்டுநல்லூர் ஆலமர தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மூலம் இந்த மாதம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா 2 கிலோ ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டது.

இந்த ஊட்டச் சத்துமாவை பயன்படுத்தி பெற்றோர் குழந்தைகளுக்கு மாவு உருண்டை தயாரித்து கொடுக்கும்போது அதனை குழந்தைகள் சாப்பிட முடியாத அளவிற்கு மாவில் அதிக அளவு மணல் கலந்து இருப்பது தெரியவந்தது. இதேபோன்று கர்ப்பிணி தாய்மார்களும் வீட்டில் சத்துமாவு உருண்டை தயாரித்து சாப்பிடும்போது நரநரவென்று மணல் அதிகம் கலந்து இருப்பது தெரியவந்தது.

இதனால் அங்கன்வாடி மையத்தில் இருந்து ஊட்டச்சத்து சத்துமாவு வாங்கிச் சென்ற பெற்றோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அங்கன்வாடி மைய ஊழியரிடம் பெற்றோர்கள் கேட்டபோது:-

இந்த மாதம் எங்கள் அங்கன்வாடி மையத்திற்கு வந்த அனைத்து ஊட்டச் சத்து மாவு பாக்கெட்டில் மணல் கலந்திருப்பதாக பெரும்பாலான பெற்றோர்கள் அவர் பயன்படுத்திய பிறகு எங்களிடம் புகார் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக நாங்கள் எங்களுடைய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் ஆகையால் இந்த மாதம் பெற்றோர் வாங்கிச் சென்ற ஊட்டச்சத்து சத்துமாவை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதை விட்டுவிடுங்கள் என்று கூறினர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில்,

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி கிராம இணை உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து மாவு மாவட்ட முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் இந்த மாதம் வழங்கப்பட்ட ஊட்டச் சத்து மாவில் மணல் அதிகளவு கலந்து இருப்பது ஊட்டச்சத்து மாவு தயாரிக்கும் இடத்தில் ஊழியர்கள், பணியாளர்கள் அலட்சியமாக செயல்படுவது தெரிய வருகிறது.

இந்த ஊட்டச்சத்து மாவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் யார் இதற்கு பொறுப்பு எனவே இனிவரும் காலங்களில் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் சத்து மாவுகள் சுத்தமாக இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இது சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உடனடியாக பொத்தேரி ஊட்டச்சத்து மாவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story