தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையை மணல் மூடியது
பலத்த சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலையை மணல் மூடியதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
ராமேசுவரம்,
பலத்த சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலையை மணல் மூடியதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
சாலையை மூடிய மணல்
ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதி. இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதியில் கடல் நீரோட்டம் மற்றும் சீற்றம் உள்ள பகுதியாகும். இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. இதனிடையே தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக அரிச்சல் முனை கடற்கரை சாலை அருகே தடுப்பு சுவரையும் தாண்டி மணலானது சாலை பகுதியை மூடி உள்ளது.
அரிச்சல்முனை சாலை அருகே சாலையை அதிகளவு மணல் மூடி காட்சி அளிப்பதால் கடந்த 3 நாட்களாகவே அரிச்சல்முனை சாலையில் வரும் வாகனங்கள் சாலை வளைவை சென்று திருப்ப முடியாமல் மணலில் சிக்கி தவித்து வருகின்றன.
சுற்றுலா பயணிகள் அவதி
சுற்றுலா பயணிகளும் அந்த மணலில் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை பகுதியில் சாலையை மூடி போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் மணலை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சுற்றுலா ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.