மணல் குவாரிகளை மீண்டும் திறக்க கோரிக்கை


மணல் குவாரிகளை மீண்டும் திறக்க கோரிக்கை
x

மணல் குவாரிகளை மீண்டும் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சி

மணல் குவாரிகளில் சோதனை

தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த 17 மணல் குவாரிகளில் கடந்த 12-ந் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனை 14-ந் தேதி முடிவு பெற்றது. இந்த சோதனையின் எதிரொலியாக கடந்த 12-ந் தேதி முதல் மணல் குவாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்ேமளன மாநில தலைவர் செல்ல.ராஜாமணி, செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு தலைமை பொறியாளர் சுப்பிரமணியனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அமலாக்கத்துறையினர் சோதனை முடிவுற்ற பிறகு கடந்த 8 நாட்களாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 17 மணல் குவாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் முழுநேரம் ஈடுபட்டு வரும் சுமார் 55 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான லாரி டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 17 அரசு மணல் விற்பனை நிலையங்களை இயக்க வேண்டும். மேலும் இணைய தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அரசு அறிவித்துள்ள விலைக்கு லாரிகளில் மோட்டார் வாகன சட்டத்தில் அனுமதித்துள்ள அளவு மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக திறக்க வேண்டும்

மேலும், மணல் குவாரிகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அதிக அளவில் எம்.சாண்ட் மணல் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் எம்.சாண்ட் விலையை டன்னுக்கு ரூ.550 என இருந்ததை ரூ.750 ஆக உயர்த்தி உள்ளனர். ஆகவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story