மணலை அகற்றும் பணி விரைவில் தொடங்கும்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணலை அகற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.
நாகர்கோவில்,
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணலை அகற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
குமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் துறைமுகம் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறுகையில், "மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக முகத்துவாரத்தில் ராட்சத எந்திரம் மூலம் மணலை அகற்றி ஆழப்படுத்துவற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்" என்றார். தொடர்ந்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பேட்டி
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி 26-ந் தேதி (அதாவது இன்று) கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீனவ பிரதிநிதிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. இந்த நிலையில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை கலெக்டர் அலுவலகத்தில் தற்போது நடந்தது.
அப்போது தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.253 கோடி ஒதுக்கீடு செய்ய இன்னும் ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்கள். இந்த தொகையில் ரூ.150 கோடி மத்திய அரசும், ரூ.60 கோடி நபார்டு வங்கியும், ரூ. 43 கோடி மாநில அரசும் ஒதுக்கீடு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் 1.18 கோடி ரூபாய் செலவில் தேங்காப்பட்டணம் துறைமுக முகத்துவாரத்தில் மணலை அகற்ற புனேயில் இருந்து ராட்சத எந்திரம் வரவழைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எனவே 20-ந் தேதிக்குள் பணிகள் தொடங்கப்படவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் துணை இயக்குனர் (மீன்வளத்துறை) காசி விஸ்வநாத பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, ஊசூர் மேலாளர் சுப்பிரமணியம், மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், தூத்தூர் ஊராட்சி தலைவர் லைலா, மாவட்ட தலைவர்கள் பினுலால் சிங், நவீன்குமார், மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஜித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.