தமிழக ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளை உச்சம் -அண்ணாமலை அறிக்கை


தமிழக ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளை உச்சம் -அண்ணாமலை அறிக்கை
x

தமிழக ஆற்றுப்படுகைகளில் பல லட்சம் ஆண்டுகள் சிறிது சிறிதாக சேர்ந்து இருக்கும் விலைமதிப்பற்ற மணலை கொள்ளை அடிப்பது உச்சம் அடைந்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

சென்னை,

பல லட்சம் ஆண்டுகளாக சிறிது சிறிதாக சேர்ந்திருக்கும் ஆற்று மணலை, ஒரே நேரத்தில் கொள்ளையடிக்கும் மணல் கொள்ளை உச்சத்தை அடைந்திருக்கிறது. அரசு கணக்கில் 7 குவாரிகளாக இருந்ததை மேலும் 15 மணல் குவாரிகளை அனுமதித்து 22 ஆக உயர்த்த தமிழக அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழக ஆற்றுப்படுகையில் உள்ள ஒட்டு மொத்த விலைமதிப்பற்ற மணல் கொள்ளை போகிறது.

தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகள், கணக்கிலே ஏழாக இருந்தாலும், 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு, மணல் அள்ள உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. இனி இது அதிகரித்து, ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரின் நிறுவனங்கள் மணல் கொள்ளையில் ஈடுபடக்கூடும்.

மணல் லாரிகளின் ஊர்வலம்

வேலூர் முதல் சென்னை வரை மதிப்பு மிக்க மணல் லாரிகளின் நெருக்கடியான ஊர்வலம் வெளிப்படையாக நடக்கிறது. ஆனால் காவல்துறை, மற்றும் அரசு அதிகாரிகள் கண்களில் இது ஏன் தெரியவில்லை என்பதை ஆளும் கட்சியின் அந்தந்தத் தொகுதி, பகுதி, வட்ட, மாவட்டச் செயலாளர்களைக் கேட்டால் தெரியும்.

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, அமைச்சர் செந்தில்பாலாஜி, தேர்தல் முடிவுகள் அறிவித்த உடனேயே, தி.மு.க.வினர் தாராளமாக மணல் அள்ளலாம் என்று அறிவித்தார். அதை வெற்றிகரமாக தற்போது செய்து கொண்டிருக்கிறார்.

போராட்டம் நடத்தப்படும்

தமிழகத்தின் தரமான ஆற்றுமண்ணுக்கு அதிக விலை கிடைப்பதால், கட்டுப்பாடில்லாமல் மாபெரும் மணல் கடத்தல் நடைபெறுகிறது.

இதற்கு அனுமதி கொடுக்காத நேர்மையான அதிகாரிகளும் மிரட்டப்படுகிறார்கள். நம் நாட்டின் இயற்கை செல்வத்தை, பேராசை கொண்ட அரசியல் வியாபாரிகளிடம் இருந்து நாம் தான் மீட்க வேண்டும். இதற்காக ஒரு மணல் புரட்சி மக்களிடையே உருவாக வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான மணல் லாரிகளும், எந்திரங்களும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நினைப்பில் தமிழகத்தின் ஆற்றுப்படுகைகளை படுகுழிகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. தமிழக பா.ஜ.க. இந்த கொள்ளைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. விரைவில் மணல் கொள்ளைக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் மக்கள் ஆதரவுடன் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story