கோத்தகிரி அருகே சந்தன மரம் வெட்டி கடத்தல்-3 பேர் கைது
கோத்தகிரி அருகே சந்தன மரம் வெட்டி கடத்தல்- 3 பேர் கைது
கோத்தகிரி
கோத்தகிரி வனச்சரகம் சோலூர்மட்டம் பிரிவிற்குட்பட்ட வாகப்பணை காப்பு காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப் போது அங்கு இருந்த சந்தன மரம் ஒன்று வெட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவத்தில் ஈடுபட்டது அரக்கோடு கிராமம் குமரமுடியை சேர்ந்த ஆல்துரை (வயது 34), சேலரையை சேர்ந்த ரவி ( 32) மற்றும் குமரமுடியை சேர்ந்த ரங்கசாமி (59) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் நேற்று முன் தினம் ஆல்துரை மற்றும் ரவியை கைது செய்து குன்னூர் சிறையில் அடைத்தனர். மற்றொரு குற்றவாளியான ரங்கசாமி என்பவரை வனத்துறையினர் தேடி வந்த நிலையில் அவரை நேற்று ஊட்டியில் வைத்து வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் 3 பேர் மீதும் தமிழ்நாடு வனச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.