சங்குகுளி மீனவர்கள் வேலை நிறுத்தம்
தூத்துக்குடியில் சங்குகுளி மீனவர்கள் புதன்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் சங்குகுளி மீனவர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சங்குகுளி மீனவர்கள்
தூத்துக்குடி பகுதியில் வெளிமாவட்ட சங்குகுளி தொழிலாளர்கள் தங்கி இருந்து சங்குகுளித்தல் தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் வெளிமாவட்ட மீனவர்களுக்கும், உள்ளூர் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியை சேர்ந்த சங்குகுளி தொழிலாளர்கள் நேற்று திடீரென கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இது குறித்து சங்குகுளி மீனவர்கள் கூறும் போது, தூத்துக்குடியில் பல நூற்றாண்டுகளாக முத்துகுளித்தல் தொழில் செய்து வந்தோம். தற்போது சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். இந்த தொழிலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தூத்துக்குடியில் தங்கி இருந்து இரவு பகலாக சங்கு குளித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த 6 மாதம் முன்பு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். இது போன்று தொடர்ந்து சங்கு குளித்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் வெளியூர் மீனவர்கள் அதிக அளவில் இருப்பதால், எங்களை தாக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்றால் எங்களை சங்குகுளிக்க அனுமதிப்பது இல்லை. ஆனால் அவர்கள் இங்கு தங்கி இருந்து சங்கு குளிக்கின்றனர்.இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எங்களை காப்பாற்ற அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சங்குகுளி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து உள்ளோம். வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றினால்தான் கடலுக்கு செல்வோம். அதுவரை தொடர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என்று கூறினார்.