சாலையோரம் கொட்டப்படும் பழங்களால் சுகாதார சீர்கேடு
வேலூரில்சாலையோரம் கொட்டப்படும் பழங்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் அண்ணாசாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் பழைய மீன் மார்க்கெட் அருகே இருந்து தெற்கு போலீஸ் நிலையம் வரை சிறு வியாபாரிகளுக்கு முக்கிய வணிகதளமாக திகழ்கிறது. இங்கு சாலையோரம் தள்ளுவண்டிகளில், சரக்கு ஆட்டோக்களில் ஏராளமானோர் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக மாலையில் அதிகளவில் வியாபாரம் நடைபெறும்.
வியாபாரிகள் சிலர் வியாபாரத்துக்கு பின்னர் கெட்டுப்போன பழங்களை அப்படியே சாலையோரம் போட்டுவிட்டு செல்கின்றனர்.
இதனால் அங்கு அழுகிய பழங்கள் சிதறி கிடக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதன் மூலம் நோய்கள் பரவும் நிலை காணப்படுகிறது. அதை சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் போட்டிப்போட்டு சாப்பிடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் அழுகிய பழங்களை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.