குளம்போல தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு


குளம்போல தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நகரில் ஆங்காங்கே குளம்போல தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகரில் ஆங்காங்கே குளம்போல தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

விரிவாக்க பகுதி

ராமநாதபுரத்தில் வளர்ந்து வரும் பகுதிகளாக உள்ள விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றன. குறிப்பாக ராமநாதபுரத்தின் கிழக்கு பகுதிகள் வளர்ந்து வரும் பகுதிகளின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகின்றன. இந்த பகுதிகள் பெரும்பாலும் பட்டணம்காத்தான் மற்றும் சக்கரக்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்டது. இங்கு மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் பெருகி வருகின்றன.

குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் பெருகிவரும் நிலையில் கழிவுநீரை வெளியேற்றுவது பெரும் சவாலாக உள்ளது. பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் டிராக்டர் மற்றும் லாரிகளில் கழிவுநீரை அகற்றி வருகின்றனர். விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளாக இருந்தாலும் ஊராட்சியாக இருப்பதால் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கழிவுநீரை வேறு வழியின்றி டிராக்டர், லாரிகளில் அள்ளிச்சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமான புறம்போக்கு நிலங்களில் கொட்டுவதை தவிர வேறு வழியில்லை.

கழிவுநீர்

இந்த நிலையில் நிலத்தடி நீர் மாசுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கழிவுநீர் டிராக்டர் மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கழிவுநீரை கொட்டுவதற்கு வேறு இடமில்லாததால் மேற்கண்ட தரவைப் பகுதிகளில் கொட்டுவதாக தெரிவித்த லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கழிவு நீரை அள்ளமுடியாது என்று புறக்கணிப்பு செய்து வருகின்றனர். இதன் காரணமாக விரிவாக்கம் செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் கழிவுநீரை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள், குடியிருப்புகளை சேர்ந்தவர்கள், வர்த்தக நிறுவனத்தினர், கடை வியாபாரிகள் கழிவு நீரை அள்ளி செல்வதற்கு வழிவகை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஊராட்சி உதவி இயக்குனர் மற்றும் வருவாய்த்துறையினர் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சுகாதார சீர்கேடு

கழிவுநீரை கொட்ட வழியில்லாததால் ராமநாதபுரம் பாரதிநகர் டி.பிளாக் பகுதி, டி.ஐ.ஜி.இல்லம் பகுதி, கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதி, அரசு ஐ.டி.ஐ. பகுதி என முக்கிய இடங்களில் கழிவுநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடாக உள்ளது. அவ்வழியாக செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசுவதால் ஆயுதப்படை மைதானம் எதிரில் புதிதாக மாவட்ட நிர்வாகம் உதவியுடன் கடை வைத்துள்ள சுயஉதவிக்குழுவினர் தங்கள் கடைகளை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் பகுதிகளில் அள்ளும் கழிவுநீரை கொட்டுவதற்கு தரவை பகுதியை கண்டறிந்து அங்கு சுகாதாரமான முறையில் கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story