கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை காவலர்கள் தர்ணா
ஊதிய உயர்வுடன்கூடிய சம்பளம் வழங்காததை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை காவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வுடன்கூடிய சம்பளம் வழங்காததை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை காவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.ஆயிரத்து 400 ஊதிய உயர்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தூய்மை காவலர்கள் 2 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 600 மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு தூய்மை காவலர்களுக்கு ரூ.ஆயிரத்து 400 ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்க உத்தரவிடப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறையில் பணியாற்றும் பெரும்பாலான தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட ஏப்ரல் மாதம் முதல் 3 மாதம் சம்பளம் தற்போது வரை வழங்கவில்லை என்று தூய்மை காவலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், பள்ளி துப்புரவு பணியாளர்கள் நல சங்கம் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர்.
சம்பளம் வழங்க உத்தரவு
மனு கொடுக்க வந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளிக்க அறிவுறுத்தியதன் பேரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் மனு அளித்தனர். தங்களுக்கு உடனடியாக சம்பளம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு ஏன் தூய்மை காவலர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பி உடனடியாக சம்பளம் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். அனைவருக்கும் 3 தினங்களில் சம்பளம் வழங்கப்படும் என்று தூய்மை காவலர்களிடம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உறுதி அளித்தார். மேலும் 3 தினங்களில் சம்பளம் வரவில்லை என்றால் தன்னை நேரடியாக வந்து பார்க்குமாறும் அறிவுறுத்தினார்.