தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2022 12:15 AM IST (Updated: 13 July 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

காத்திருப்பு போராட்டம்

தமிழக கிராம ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாநில பொருளாளர் பொன்னையன் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர் மணி வரவேற்றார். மாநில தலைவர் கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பாண்டியன், மகளிர் அணி மாநில தலைவர் மகேஸ்வரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில செய்தி தொடர்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கோரிக்கைகள்

இந்த போராட்டத்தில் டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியமாக 250 ரூபாய் வழங்கப்படுகிறது. இவற்றை மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் அல்லது காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் ரூ.3600 மாத ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மூன்று ஆண்டுகள் பணி செய்த பின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தாமல் உள்ளது. ஆகவே பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவித்திருந்த ஓய்வூதியம் இதுவரை வழங்காமல் நிலுவையில் உள்ளது. இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில், ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம், ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story