தூய்மை பணியாளர்கள் 'திடீர்' வேலைநிறுத்தம்
கடையநல்லூரில் தூய்மை பணியாளர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 15 வார்டுகளில் நிரந்தர தூய்மை பணியாளர்களும், 18 வார்டுகளில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 82 பேரும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நேற்று திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் வேல்முருகன், தூய்மை பணியாளர் மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட இணை செயலாளர் ராஜசேகர், கருப்பசாமி, மாரியப்பன், முருகன், நாகம்மாள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான், சுகாதார அலுவலர் இளங்கோவன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர். தற்காலிக தூய்மை பணியாளர்களின் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்ற போதிலும் நகராட்சியின் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் தங்கு தடை இன்றி தூய்மைப்பணி நடைபெற்றதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் சக்திவேல் தெரிவித்தார்.