பிச்சை கேட்கும் போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்


பிச்சை கேட்கும் போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

பிச்சை கேட்கும் போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சியில் அறிவிக்கப்பட்ட சம்பளம் வழங்க கோரி பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பள பிரச்சினை

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.648-ஐ மாநகராட்சி நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த ரூ.721-ஐ வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நிதி வருவாயை கருத்தில் கொண்டு இந்த அளவுக்குதான் வழங்க முடியும் என்று மாநகராட்சி அறிவித்து இருந்தது. மாநகராட்சி அறிவித்த தினக்கூலியும் பிடித்தம்போக ரூ.421 அளவுக்குதான் கிடைப்பதாக கூறி கோவை மாவட்ட தூய்மை பணியாளர்கள் மீட்பு கூட்டு இயக்கம் சார்பில் நூதன போராட்டத்தை அறிவிக்கப்பட்டது.

பிச்சை எடுக்கும் போராட்டம்

இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கையில் சட்டி ஏந்தி பிச்சை கேட்கும் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு செல்வராஜ் தலைமை தாங்கினார். போராட்ட குழு நிர்வாகிகள் ஆர்.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு செல்வம், வி.ஜோதி, மணிக்கொடி, கே.ரவி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டம் குறித்து செல்வராஜ் கூறியதாவது:-

நிர்ணயிக்கப்பட்ட சம்பளம்

"கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 3,600 பேர் உள்ளனர். இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். இதனை வழங்க வலியுறுத்தி 5 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் பணம் இல்லை, நிதி இல்லை என கூறி வருகின்றனர். இதனால், பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். வரும் மாதம் அரசாணையின்படி சம்பளம் வழங்கவில்லை என்றால் அனைத்து வார்டுகளிலும் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி நிதி திரட்டி மாநகராட்சியிடம் கொடுக்க முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story