குப்பைகளுக்கு தீ வைத்த தூய்மை பணியாளர்கள்


குப்பைகளுக்கு தீ வைத்த தூய்மை பணியாளர்கள்
x

வேலூர் பெரியார் பூங்கா அருகே குப்பைகளுக்கு தீ வைத்த தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். அவை அந்தந்த பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன. பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் வீசுவதையும், தீ வைப்பதை தடுக்கவும் தினமும் வீடுகள்தோறும் குப்பைகள் பெற வேண்டும் என்று தூய்மை பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வேலூர் பெரியார் பூங்கா அருகே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அங்கு சேகரமான குப்பைகளை பூங்காவையொட்டிய நடைபாதையில் குவித்து தீ வைக்க முயன்றுள்ளனர். இதற்கு அந்த பகுதியில் உள்ள கார், வேன் டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதனையும் மீறி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தீ வைத்து எரித்தனர். அதனால் குப்பையில் இருந்து கரும்புகை வெளியேறி அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுகுறித்து மாநகர் நலஅலுவலர் கணேஷிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாநகராட்சி ஊழியர் அங்கு சென்று எரிந்து கொண்டிருந்த குப்பையில் தண்ணீர் ஊற்றி அணைத்தார். மாநகராட்சி தூய்மை பணியாளர்களே குப்பைகளுக்கு தீ வைத்த சம்பவம் பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story