சாலையோரங்களில் குப்பைகளை தரம் பிரிக்கும் தூய்மை பணியாளர்கள்


சாலையோரங்களில் குப்பைகளை தரம் பிரிக்கும் தூய்மை பணியாளர்கள்
x
தினத்தந்தி 29 Jun 2023 7:45 AM IST (Updated: 29 Jun 2023 12:24 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்க இடவசதி இல்லாததால் தூய்மை பணியாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்க இடவசதி இல்லாததால் தூய்மை பணியாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

குப்பை கிடங்கு

ஆனைமலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் தினந்தோறும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 9 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாசாணியம்மன் கோவில் திருவிழா காலங்களில் 12 டன் வரை குப்பைகள் சேரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் நரசிம்மநகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் பணியில் சுமார் 80 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் மறுசுழற்சி செய்வதற்காக விற்பனை செய்யப்படுகிறது. மக்கும் குப்பைகளான காய்கறி கழிவு, இலைதழை, செடி, கொடிகள், உள்ளிட்ட கழிவுகள் இயற்கை உரம் தயாரிக்கவும், மண்புழு உரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இடவசதி இல்லை

குப்பைகள் தேங்குவதை தடுக்கும் வகையில், விவசாயிகளுக்கு பயன்படும் குப்பைகள் ஒரு கிலோ ரூ.1 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பேரூராட்சிக்கும் வருமானம் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் குப்பை கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால் குப்பைகளை தரம் பிரிக்க முடியாமலும், உரம் தயாரிக்க போதிய இடவசதி இல்லாமலும் தூய்மை பணியாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

இழுபறி

ஆனைமலை பேரூராட்சியில் தற்போது இருக்கும் குப்பை கிடங்கு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதனால் குப்பைகளை கொட்டுவதற்கும், குப்பைகளை தரம் பிரிப்பதற்கும் போதிய இடவசதி இல்லை. இதனால் சாலையோரங்களில் வைத்து குப்பைகளை தரம் பிரிக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த 2016-ம் ஆண்டு செம்மேடு செல்லும் வழியில் காந்தி ஆசிரமம் அருகே குப்பை கிடங்கிற்கு 2 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த கலெக்டர் அனுமதி அளித்தார். ஆனால் அந்த நிலம் பயன்பாட்டிற்கு வராமல் இழுப்பறி நீடிக்கிறது. இதில் உயர் அதிகாரிகள் தலையிட்டு, அந்த நிலத்தை குப்பை கிடங்காக பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சான்றிதழ் அளிக்கப்படவில்லை

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், குப்பை கிடங்கிற்கு கலெக்டர் ஒதுக்கீடு செய்த இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வருவாய் துறையினர் அளவீடு செய்து சுவாதி இனச்சான்று வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதுவரை 4 வட்டாட்சியர் மாறியுள்ளனர். ஆனால் ஒரு முறை மட்டும் இடம் அளவீடு செய்யப்பட்டது. ஆனால் வட்டாட்சியர் பயன்பாட்டு சான்றிதழ் அளிக்கப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகம் பலமுறை கேட்ட போதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையீட்டு குப்பை கிடங்கிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.



Next Story