தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்


தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் 3 ஆயிரம் புறநோயாளிகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் 380 தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தனியார் ஏஜென்சியின் மேலாளராக இருந்தவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் மேற்பார்வையாளராக பணியாற்றிய ஒருவரை மேலாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் மேற்பார்வையாளராக இருந்தவர் பெண் தூய்மை பணியாளர்களிடம் தகாத வார்த்தை பேசி வந்ததாக புகார் கூறப்பட்டது. இதனால் அவரை மேலாளராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் பணியை தொடங்கினர். இந்த பிரச்சினை குறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நிர்வாகம், தூய்மை பணியாளர்களை நியமனம் செய்த தனியார் ஏஜென்சி இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


Next Story