4-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்: அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி- இன்று ஊர்வலம் நடந்த முடிவு
ஈரோடு மாநகராட்சியில் 4-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் 4-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
வேலை நிறுத்தம்
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தையொட்டி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருப்பூர் கே.சுப்பராயன் எம்.பி., ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, எல்.பி.எப். மாவட்ட செயலாளர் கோபால், எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் பி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் என்.ராகவன் முன்னிலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாநகராட்சி துணை ஆணையாளர் கே.எம்.சுதா, தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும், அதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
அதற்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது, 'தொழிற்சங்கங்கள் சார்பில் கொடுக்கப்பட்ட கடிதங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து பதில் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த தொழிற்சங்கத்தினர் தங்களது போராட்டத்தை கைவிடவும் மறுத்து விட்டனர். இதனால் தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஊர்வலம்
கடந்த 4 நாட்களாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளன. வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்தும் குப்பைகள் சேகரிக்கப்படவில்லை. இதனால் வீடுகளிலேயே குப்பைகளை சேகரித்து வைத்திருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பல்வேறு இடங்களில் குப்பை குவியலாக காட்சி அளிக்கிறது.
இதற்கிடையே தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று கலெக்டர் மூலமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனுவை அனுப்பி வைப்பது என்றும், இதில் தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.