ஈரோட்டில் 5-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்; குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோட்டில் 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
ஈரோட்டில் 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
வேலை நிறுத்தம்
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது.
தூய்மை பணியாளர்கள் நேற்று காலை ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தங்களது குடும்பத்துடன் திரண்டனர். அங்கு ஆலோசனை நடத்திய அவர்கள், பிறகு கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேசிடம், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சுப்பிரமணி உள்பட பலர் தூய்மை பணியாளர்களின் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
போராட்டம் தொடரும்
இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் சுமார் 500 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மகளிர் குழுக்கள் மூலமாக 1,306 தூய்மை பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தினமும் ரூ.707 சம்பளம் அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இந்தநிலையில் புதிய அரசாணையின்படி தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கான டெண்டர் நடத்தப்பட்டது.
அதன்படி இனிமேல் 843 பேர் மட்டுமே பணி செய்ய முடியும். மேலும் அவர்களது சம்பளமும் ஒரு நாளுக்கு ரூ.533 என்ற அடிப்படையில் குறையும். ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனம் 1 டன் குப்பையை சேகரிப்பதற்கு ரூ.3 ஆயித்து 905 மாநகராட்சி சார்பில் வழங்கப்படும். ஈரோடு மாநகராட்சியில் தினமும் 257 டன் குப்பை சேகரமாகிறது. எனவே தினமும் ரூ.10 லட்சம் வரை செலவிடப்பட உள்ளது.
தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த கோரிக்கை வலியுறுத்தி மனு கொடுத்து உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.