சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு...!


சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு...!
x

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்று கொண்டார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, மும்பை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமிக்குமாறு, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த ஏப். 19-ல் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.

அந்தப் பரிந்துரையை ஏற்று,மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று காலை பதவியேற்று கொண்டார். சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட்டின் 33வது தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். அடுத்த ஆண்டு மே மாதம் சஞ்சய் விஜய்குமார் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், ரகுபதி, தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த 1962-ம் ஆண்டு மே மாதம் மராட்டிய மாநிலத்தில் பிறந்த நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து 1985-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கினார்.

2010-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்துவருகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி இவர் ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story