சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
துடியலூர்
துடியலூரை அடுத்துள்ள ஜங்கம்மநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 25-ந் தேதி அக்னி ஆராதனம், காலசாந்தி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.
நேற்று ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை ஸ்ரீ வைக்கானஸ ஆகம ரத்னா சோளிங்கர் ஸ்ரீ ஸ்ரீ ராம் பட்டாச்சாரியார் அவர்கள் தலைமையில் தல அர்ச்சகர் அகம ரத்னா கரம் சிவ ஸ்ரீ மெய்கண்ட சிவ சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைத்தார்கள். தொடர்ந்து அரசமரத்து ஆனந்த விநாயகர், சொர்ண கால பைரவர், நவக்கிரகம் மற்றும் சீதா சமேத ராமச்சந்திர சுவாமி உள்பட அனைத்து விமானங்களும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆஞ்சநேயர் பஜ்ரங்கி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் மகா அன்னதானம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு ராமர்-சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜைகளும் நடைபெற உள்ளது.