திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா


திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில்  மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:46 PM GMT)

பசுமை தமிழ்நாடு நாளையொட்டி திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

திருவாரூர்


பசுமை தமிழ்நாடு நாளையொட்டி திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

25 ஆயிரம் மரக்கன்றுகள்

பசுமை தமிழ்நாடு நாளையொட்டி திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் 700 மரக்கன்றுகள் நடும் விழாவில் கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மரங்கள் மற்றும் காட்டின் முக்கியத்துவத்தை பேணுவதோடு, மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லூயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதலின் கீழ் மரம் நடும் நாள் மற்றும் தமிழ்நாடு அரசினால் வனத்துறையில் தமிழ்நாடு பசுமை இயக்கம் தொடங்கப்பட்டு ஒராண்டு நிறைவடைவதை முன்னிட்டு பசுமை தமிழ்நாடு நாள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்புடன் இயற்கையோடு இணைந்து கொண்டாட ஆணை வரப்பெற்றுள்ளது.

மழைக்காலம் தொடங்கும் முன்

அதன் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் முதற்கட்டமாக 700 மரக்கன்றுகள் மத்திய பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் நேரடி பங்களிப்போடு மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், மாவட்டத்தில் சம்பந்தபட்ட துறைகளின் மூலம் மரக்கன்றுகள் பள்ளி, கல்லூரிகளிலும், விவசாயிகளின் நிலங்களிலும் மழைக்காலம் வருவதற்கு முன்கூட்டியே நடப்படவுள்ளது என்றார்.

விழிப்புணர்வு கையேடு

அப்போது மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் நடவு குறித்த விழிப்புணர்வு கையேடு, இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் நெகிழி பொருட்கள் பயன்பாட்டினை தவிர்த்து சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் உருவாக்கப்பட்ட துணிப்பைகள் மற்றும் பொருட்களை கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த், மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் திருமுருகன், உதவி கலெக்டர் சங்கீதா, வன விரிவாக்க அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு துணை தலைவர் பாலச்சந்தர், நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், ஊராட்சி மன்ற தலைவர் அய்யப்பன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story