தண்ணீரின்றி கருகிய மரக்கன்றுகள்


தண்ணீரின்றி கருகிய மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு அருகே தண்ணீரின்றி கருகிய மரக்கன்றுகள்; சமூக ஆர்வலர்கள் வேதனை

மயிலாடுதுறை

திருவெண்காடு:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி, தமிழக அரசு பல துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நெய்த வாசல்-திருவெண்காடு செல்லும் சாலையில் கடந்த மாதம், கிட்டத்தட்ட 400 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பாதுகாப்பிற்காக மூங்கிலால் ஆன பாதுகாப்பு கூண்டுகள் வைக்கப்பட்டது. ஆனால் நடப்பட்ட சில நாட்களிலேயே தண்ணீர் ஊற்றாத காரணத்தால் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கருகி விட்டது. தற்போது கூண்டுகள் காட்சி பொருளாக உள்ளது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் வேளையில் மரக்கன்றுகளை நடுவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் அவசர கதியில் மரக்கன்றுகளை நட்டுவிட்டனர். ஆனால் அந்த கன்றுகள் உயிர் பிழைக்கும் வரை தேவையான தண்ணீரை தினந்தோறும் வழங்கவில்லை. இதனால் மரக்கன்றுகள் கருகி விட்டது. தமிழக அரசு இயற்கையை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை தொடங்கி செய்து வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story