சரத்குமார் பிறந்தநாள் விழா:அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


சரத்குமார் பிறந்தநாள் விழா:அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மத்திய மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், கட்சி நிறுவனர் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு பனிமயமாதா ஆலயத்திலும், 7.30 மணிக்கு சிவன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 9 மணிக்கு வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரத்தில் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நேற்று பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டன.

பகல் 11 மணிக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு கலை இலக்கிய அணி சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு டி.சவேரியார்புரத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு தாளமுத்துநகர் பகுதியில் கட்சி கொடியேற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாலை 5 மணிக்கு புதியம்புத்தூரில் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதே போன்று நகரின் பல பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளுக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் எம்.எக்ஸ்.வில்சன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை செயலார் குரூஸ் திவாகர் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளரும், தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளருமான என்.சுந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதேபோன்று ஏரல், பண்டாரவிளை, பண்ணைவிளை மற்றும் சூலைவாய்க்கால் ஆகிய ஊர்களில் சரத்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். ஏரல் நகர அவைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி குமார் உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story