திருச்சி மாநாட்டில் சசிகலா, தினகரன் பங்கேற்பு? - பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி


திருச்சி மாநாட்டில் சசிகலா, தினகரன் பங்கேற்பு? - பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
x

அ.தி.மு.க.வில் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு என்பதை திருச்சி மாநாடு தீர்மானிக்கும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

திருச்சி,

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முப்பெரும்விழா மாநாடு இன்று (திங்கட்கிழமை) மாலை நடக்கிறது. இந்த மாநாட்டுக்கான அரங்கம் அமைக்கும் பணியை அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டார்.


அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறதா என்பதை இந்த மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எங்கள் மாநாட்டுக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க.வுக்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். ஒரு கட்சி இயங்குவதற்கு தொண்டர்களும், கட்சியின் எதிர்காலத்துக்கு மக்கள் ஆதரவும் முக்கியம்.

அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆருக்கு ஜானகி கொடுத்தது. அது எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமானதல்ல. அந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உரியது. திருச்சியில் (இன்று) நடைபெறும் மாநாட்டில் சசிகலா மற்றும் தினகரன் பங்கேற்பு குறித்து தற்போது உறுதியாக எதுவும் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story