சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு:இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. பதில் அளிக்க அவகாசம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. பதில் அளிக்க அவகாசம் கொடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக 2020-ம் ஆண்டு அங்குள்ள போலீஸ்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீசார் தாக்கியதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைதானார்கள். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ. பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.